Sunday, August 16, 2009

மர்ம தோட்டத்தின் இரவு பொழுதுகள்...


காலை 6 மணி ... மழை நீர் ஓடையாய் தெருவில் ஓடிகொண்டிருந்தது . நள்ளிரவில் தூக்கம் களைந்து ஜன்னலில் நின்றபோது மழை சுழன்றி அடித்தது நினைவுக்கு வந்தது .... அன்று நான் கண்ட கனவால் பயமும், அமானுஷ்யமும் என்னை சூழ்ந்து இருந்தன .. "என் படுக்கை அறையில் கணினி தானே இயங்கியது .. அலமாரியை திறக்க முடியவில்லை , என்னை தவிர வேறு ஒன்று அறையில் இருப்பது தெளிவாய் தெரிந்தது .. மூச்சு விட முடியாமல் தரையில் உருண்டேன் .. " மேற்சொன்னது தான் அந்த கனவு ...

இந்த பேய் , பிசாசு கதைகளில் எல்லாம் கவனம் விட்டு சில வருடங்கள் ஆகி விட்டன .. இயந்திர வாழ்கையில் அவற்றின் மேல் பயம் காணாமல் போய் இருந்தது அல்லது மறந்து போய் இருந்தது. என் இளமைக்கால வாழ்க்கை கதைகளாலும் , அமானுஷ்யதாலும் , மிதமிஞ்சிய கற்பனைகளாலும் நிரம்பியது .. 17 ஆண்டுகளுக்கு முன்பு என் அறை இருக்கும் இடத்தில் சிறிய தோட்டம் ஒன்று இருந்தது .. எங்கள் பழைய வீட்டின் பின் புற கதவின் வழியில் தோட்டத்தை அடயலாம் . ஒரு கொய்யா மரம், ஆரஞ்சு மரம், முருங்கை மரம் ( வேதாளத்தின் இருப்பிடமாக கருத படுவது ) சில வகை டிசம்பர் செடிகள் அடர்த்தியாய் படர்ந்து இருந்தன .. கண்ணாமூச்சி விளையாட்டில் அனைவருமே கச்சிதமாய் ஒளிந்துகொள்ள தோட்டத்தில் புதர்களும் , பொந்தும் நிறைய இருந்தன ...

தோட்டத்தின் செடிகள் இரவில் பேசிக்கொள்வதாக பாட்டி என்னை பயமுறுத்துவது உண்டு .. ஐந்து தலை நாகம் , இரவில் தோட்டத்தின் வழியாக சென்று கிணற்றில் குளிக்கும் பேய் , இன்னும் சில பயங்கர விலங்குகள் இரவில் அங்கே வருவதாக பாட்டி சொல்வாள் . இரவில் நான் அங்கே செல்வதை தடுப்பதற்கு சொல்லப்பட்ட கதைகள் அவை என எனக்கு அப்போது புரியவில்லை .

ஆனால் எனக்கு இன்னும் நினைவில் உள்ளது .. ஆம் ... பாட்டி சொன்னதில் சில உண்மைகளும் இருக்கத்தான் செய்கிறது. தோட்டத்தின் குணங்கள் இரவு நெருங்க நெருங்க மாற ஆரம்பித்தது , ஒரு நாள் அந்தி மாலை காலத்தில் அடர்த்தியான செடிகளின் நடுவே நின்ற என் மேல் மழை தூர ஆரம்பித்தது .. பலத்த காற்றில் செடிகள் என்னை அறைந்தன , முருங்கை மரம் ஒடிந்து விழுவது போல ஆடியது .. முழுமையாக வளராத என் புலன்களை ஏதோ நான் உணர்ந்த , ஆனால் பார்க்க இயலாத அமானுஷ்யம் ஆக்கிரமிக்க தொடங்கியது ... வேறு ஏதோ பிரதேசத்துக்கு இழுக்க பட்டு கொண்டிருந்தேன் .. பாட்டி என்னை இழுத்து பின் பக்க கதவை சாத்தும் வரை எனக்கு மூச்சு வர வில்லை ...

சில நாட்களில் அதிகாலையில் நான் எழுவது உண்டு .. தோட்டத்து கதவு பழயது , அதன் மெல்லிய ஓட்டைகள் வழியாக டிசம்பர் செடியை காணலாம் .. இன்னொரு விசித்திரத்தையும் நான் கண்டு இருக்கிறேன் , சிறிய ரக வாகனம் போன்ற ஒன்றில் , மிகச்சிறிய உருவத்தில் சிலர் என் தோட்டத்தை கடந்து போவது போல கதவிடுக்கில் நான் பார்த்திருக்கிறேன் ..ஆனால் பாட்டியின் உதவி இல்லாமல் என்னால் அந்த தாழ்பாளை திறக்க முடியாது .. அடம் பிடித்து திறந்து பார்த்தால் எதுவும் இருக்காது .. பின்னாட்களில் alliens , ET படங்கள் பார்க்கும்போது இச்சம்பவம் என் பொரியில் தட்டியது ...

சில
மாதங்கள் தோட்டத்தில் குழந்தையில் அழுகுரல்கள் கேட்டுகொண்டே இருந்தன ( பூனையின் சேட்டை ) .. அது இன்னும் என்னை கலவரபடுதியது ... மார்கழி மாதத்தில் பனி எங்கள் ஊரில் சற்றே அதிகமாக பொழியும் .. ஒருநாள் ஆரஞ்சு மரத்தில் இருந்து சற்றே வேகமாக வெளியேறிய பனியை பார்த்ததில் எனக்கு காய்ச்சல் வந்தது, அதை பனி என என் மனதிற்கு நினைக்க தோன்றவில்லை ....

எது எப்படியோ .. இன்று தோட்டமும் இல்லை , பாட்டியும் இல்லை .. தோட்டம் இருந்த இடத்தில் என் படுக்கை அறை உள்ளது.பாட்டி சொல்லிய பேய் என்னை தாண்டி தான் குளிக்க செல்ல வேண்டும் .. ஆனால் கிணறு பாழடைந்து போய்விட்டது . பழைய கதைகளை நினைத்ததில் பொழுது ஓய்ந்து இருந்தது .. இரவு அறையில் தனியாக இருந்தேன் ...நேரம் 12 கடந்து செல்ல தொடாஙகியது...அறையில் நிறைந்திருந்த நிசப்தத்தால் மழையின் சத்தம் பெருசாக கேட்டது .. வெட்டப்பட்ட தோட்டத்தின் வேர்கள் என் அறையின் அடியில் இன்னும் உயிருடன் இருப்பது போல உணர்ந்தேன்..மீண்டும் கற்பனைகளில் மட்டும் மிரட்டிய அமானுஷ்யம் நிஜத்தில் என் கட்டுபாட்டை பறிக்க தொடங்கியது... பய உணர்வுக்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டு இழுத்து போர்த்திக்கொண்டு தூங்க தொடங்கினேன் ..
இரவு 10 மணிக்கு மேல் அந்த அறையில் நான் இருப்பதில்லை ... நான் வீரன் தான் .. பயம் வரும் வரை ... !

Wednesday, August 5, 2009

பூனை


புனர்வின்போதே குழந்தையின் அழுகுரல் - பூனைகள் இரவில் ......