Wednesday, September 30, 2009

நான், சிவா , சில தேவதைகள் .....


"ஞாயிறு என்பது கண்ணாக , திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக ,சேர்ந்தே நடந்தது அழகாக "

தம்மடித்து கொண்டிருந்த சிவாவை வெறுப்பேற்ற பாடினேன் .. அவன் சட்டை செய்யாமல் வானத்தை வெறித்து கொண்டிருந்தான் . நானும் சிவாவும் பள்ளியிலிருந்து கல்லூரி வரை ஒன்றாய் இருக்க விதி செய்யப்பட்டவர்கள் ... 11 ஆண்டுகள் சேர்ந்து படித்தாலும் கல்லூரியின் கடைசி நாளான இன்றும் , பள்ளியின் எங்கள் கடைசி நாளும் தான் நினைவில் ஆழ பதிந்துள்ளது .. காரணம் எங்கள் இருவர் வாழ்வில் வந்து போன காதல்களுக்கும் அன்றே கடைசி நாட்களாக அமைந்தது ....


பத்தாவது படிக்கும் வரை ரயில் நிலையத்தில் இருக்கும் ரோஸ் நிற பூச்செடி , பச்சை நிறமே பாடல் இப்படி எதை பார்த்தாலும் எனக்கு என் பால்ய தோழி மதுவின் நினைவு ஒரு நொடியாவது வந்து போகும் .. அதைத்தவிர வேறு யாரின் நினைவும் வந்ததில்லை .. நானும் சிவாவும் படித்தது ஆண்கள் பள்ளிஎன்றாலும் ,நாங்கள் சென்ற டியுசனில் பெண்களும் படித்தனர் .. பத்தாவதில் நான் அமுல் பேபி , சிவாவோ மெலிதாக funk விட்டபடி இருப்பான் .. எங்கள் டியுசனில் படித்த சுஜாவுக்கு அவன் மேல் ஒரு கண் .. சிவாவும் அவளும் ஜாடயிலும் , கண்ணாலும் பேசிகொள்வார்கள் ...
பள்ளியின் இறுதிநாளான அன்று சிவாவிடம் கேட்டேன் .. " டேய் நி சுஜாவ லவ் பண்றியா டா ? " ... "லவ் ah .. போடா வெண்ண .. சும்மா பாத்தமா டைம் பாஸ் பன்னோமானு போய்டனும் புரியுதா ... அவல சும்மா trial பாத்தேன் டா .. நீயும் வேணும்னா பாரு " என்றான் .. ச்சே ஒடிக்கி போன்ற இந்த சுஜாவை விட என் மது இன்னும் அழகாய் இருக்ககூடும் என என் மனம் சொல்லியது ...

அடுத்து நாங்கள் +2 படித்து முடித்தது இருபாலர் பயிலும் பள்ளியில் .. பள்ளியின் கடைசிநாளான அன்று , மீசையும், பெரிய கிருதாவுடன் இருந்த சிவா அழுதுகொண்டிருந்தான் ... "டேய் அழாத டா ..பிரியா பாக்கறா டா " என் சமாதானத்தை அவன் ஏற்கவில்லை ..
" மச்சி , அவ என்ன லவ் பண்ணாட்டி கூட பரவா இல்ல டா .. priya is my sister னு எழுதி வாங்கிட்டா டா .. அந்த பேப்பர் மீரா கிட்ட தான் டா இருக்கு .. அத எப்படியாவது வாங்கிடு மச்சி " என மீண்டும் அழத்தொடங்கினான் .. நான் பொத்துக்கொண்டு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டேன் .. பள்ளியில் சேர்ந்த நாள் முதலே எனக்கு மீரா மீதும் , சிவாவுக்கு பிரியா மீதும் எக்கச்சக்க ஈர்ப்பு ...

மீரா என் ஜன்னலின் தென்றல் .. எனக்கேற்ற உயரம் ... அவளை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் நான் நிலவை தொட்டு வந்தேன் ... சுருங்க சொன்னால் , மீராவை பார்த்தால் நான் மட்டையாகி போனேன் ... தைரியமாக அவளிடம் பேசியிருந்தால் இந்நேரம் மீரா என் முதல் காதலி ஆகி இருக்கக்கூடும் .. ஆனால் சிவா ப்ரியாவை தன் முதல் காதலி என கூறிக்கொள்ளலாம் ... சுஜாவிடம் பார்த்த trial ப்ரியாவிடம் நன்கு அவனுக்கு உதவியது ..தொட்டு பேசுவதும், செல்லமாய் கிள்ளுவது வரை சிவாவும், பிரியவும் நெருக்கம் காட்டினார்கள் ..
" மச்சி மீரா கூட இப்போ எனக்கு க்ளோஸ் ஆயிட்டா .. ந உன்னோட லவ் கு கண்டிப்பா ஹெல்ப் பண்றேன் டா " என சிவா சொன்னது என்னை கடுப்பேற்றியது .

பிரியவும் ,மீராவும் நெருங்கிய தோழிகள் ... ஒரே நிறம், ஒரே உயரம் ... ஆனால் என் ஆளுக்கு இருந்த அழகிய தெற்றுப்பல் இந்த சிவாவின் ஆளுக்கு இல்லை ... எது எப்படியோ ஜெட் வேகத்தில் சென்ற சிவாவின் அலப்பறை ப்ரியாவிடம் propose செய்ததும் கவுந்துவிட்டது ... முடிவில் நடந்த பஞ்சாயத்தில் priya is my sister என எழுதிக்கொடுத்தான் இந்த வீனா போன சிவா ....

என் தேவதையிடம் இருந்த அந்த பேப்பரை கேட்பது போல அவளிடம் முதல் முறை பேச எண்ணினேன் .... இறுதி பரீட்சை முடிந்து அவள் அருகில் தயங்கி நின்றுக்கொண்டிருந்த என்னிடம் அந்த காகிதத்தை நீட்டிவிட்டு கடைசியாக ஒருமுறை பார்த்துவிட்டு நடந்தாள் ... " priya is my sister " என எழுதப்பட்ட அந்த காகிதம் சிவா காதலின் சமாதி .. ஆனால் அது இன்றுவரை என் மீராவின் நினைவு சின்னம் ...

அது வரை வகுப்பில் என் "பெஞ்ச் மேட்" ஆக இருந்த சிவா , நான் படித்த பொறியியல் கல்லூரியில் எனக்கு பெஞ்ச் மேட் , ரூம் மேட் , பார் மேட் , ப்ராஜெக்ட் மேட் என சகலமும் ஆகிப்போனான் .. எங்கள் நட்பு இன்னும் ஆழமாகிப்போனது ... அன்று எங்கள் கல்லூரி இறுதி தேர்வை முடித்திருந்தோம் .. அன்று இரவு எங்களின் 4 ஆண்டுகால கல்லூரி வாழ்கை நிலவை வருடி சென்ற மேகத்தாலும் , சிவாவின் சிகரெட் புகையிலும் அசைபோடப்பட்டது ...

"டேய் .. அணு லெட்டர் கொடுத்தா போல? .. எங்க அது ? ..
" அந்த மயிர அங்கேயே கிளிச்சி போட்டுட்டேன் டா ! என சிவா கத்தினான் ...

கல்லூரி வாழ்வில் காதலுக்கு இடம் குறைவு தான் ... பெண் உடலை தொடுவது, முத்தம், அவளோடு ஊர் சுற்றுவது , அதுவரை நண்பர்களுடன் மட்டும் காமத்தை பற்றி விவாதித்த மனது பெண்ணிடம் காமத்தை பற்றி விவாதிக்க ஆர்வம் காட்டியது ... "ஆண் பெண் நட்பு" என்ற போர்வையில் இவையனைத்தையும் செய்ய முடிந்தது ... சிவாவும் , அணுவும் அந்த போர்வையில் அடித்த கூத்து சொல்லி மாளாது ... அவர்களை பார்த்து எனக்கும் ஆசை வந்தது ... நான் "பெண் தோழி " என தேடி பிடித்தது சுதாவை !!!

சுதாவுக்கும் , அணுவுக்கும் அறுபது வித்தியாசங்கள் இருந்தன ... அணு தளுக், மொளுக் கவர்ச்சி நடிகையை போல ... எதற்கும் அஞ்சாதவள் ( சிவாவுக்கும் அவளுக்கும் பலான பலானதெல்லாம் முடிந்தாயிற்று ) .. சுதாவோ கண்ணாடி போட்ட பழம் போல இருந்தாள் .. சிவாவும் ,அணுவும் தங்களின் வருங்கால honeymoon spot முதல் தங்கள் குழந்தையின் school வரை முடிவு செய்திருந்தனர் .. என்னால் சுதாவை மனைவியாக கூட எண்ணிப்பார்க்க முடியவில்லை ...

" இங்க பாருடா .. பொண்ணுங்க எல்லாம் இப்போ சரி இல்ல ... arrange marriage நா second hand தான் டா கெடைக்கும் ... ஒழுங்கா சுதாவ மடக்க பாரு .. ஏதோ நா பன்ன புண்ணியம் எனக்கு அணு கெடச்சி இருக்கா .. நீயும் காதல அனுபவிச்சு பாருடா .. அப்போ தான் உனக்கு புரியும் " என சிவா அறிவுரை கூறினான் ...

நானும் சிவாவும் " double bedroom flat " வாங்க தீர்மானித்தோம் ...சிவா- அணு , நான்- சுதா வசிப்பதற்காக ... சினிமாவில் வருவது போல ஜோடியாக டூயட் பாடி கனவுகண்டோம் ... சில நாட்களே கனவு நீடித்தது .. சுதா வீட்டில் செல் போனை பிடிங்கிய முதல், அணு சிவாவை உதறிவிட்டு ராகுல் பின்னால் சென்றது வரை ..... சிவாவின் முகத்தில் அதன் பின் நான் சிரிப்பையே பார்த்ததில்லை ...

அன்று வாங்கிய பீரை "பாட்டில் சிப்" அடித்துவிட்டு சிவா கத்தினான்
" மச்சா ... காதலோட வலி அனுபவிச்சா தான் டா தெரியும் .. உனக்கு எங்க தெரிய போகுது? நீ பன்னுனதேல்லாம் காதலே இல்ல டா ! யாருக்கும் ப்ரொபோஸ் பண்ணக்கூட உனக்கு தைரியம் இல்ல டா "

" நீ பன்னுனதெல்லாம் மட்டும் என்ன காதலா? " என நான் சிவாவை பற்றி எண்ணிக்கொண்டேன் ....

சிவா ஒரு ஓரமாய் மட்டையாகி கிடந்தான் .... மேகங்களில் இருந்து விடுப்பட்ட நிலவை கண்டதும் எனக்கு மீண்டும் என் பால்ய தோழி மதுவின் முகம் நினைவுக்கு வந்தது ...

"நேற்றைய பொழுது கண்ணோடு .. இன்றைய பொழுது கைய்யோடு
நாளைய பொழுதும் உன்னோடு .. நிழலாய் நடப்பேன் பின்னோடு !"