Wednesday, September 14, 2011

மந்திர புன்னகையும்.... மஞ்சள் நிலவும் ....


அது ஒரு கனவு தேசத்தின் பின் மாலை நேரம் ..அது வரை மாலை பொழுதின் ஒளி சிதறல்களால் மின்னிகொண்டிருந்த அந்த மலைக்குன்று மெல்ல மெல்ல இருளால் நிரம்பி கரிய யானையை போல் மாறிக்கொண்டிருந்தது ...யானையின் பாகன் போல குன்றின் மேல் உட்கார்ந்து தன் எதிரே பறந்து விரிந்திருந்த அரபிக்கடலை கோபி வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான் . வழக்கம் போல மதியம் ஆரம்பித்து மாலை வரை குன்றின் சமதளத்தில் கால்பந்து ஆடிய களைப்பில் தன் கையில் இருந்த நுங்கு மட்டையில் நீரை உறிஞ்சிக்கொண்டிருந்தான் ...தன் பின்னால் யாரோ குதிப்பதை உணர்ந்து திரும்பினான் , ஹேய்ய் !! ஹேய்ய்  என குதித்தபடி வினு எதற்கோ டாட்டா காட்டிக்கொண்டிருந்தான் .. யாருக்கு இப்ப நீ டாட்டா சொல்லிட்டு இருக்க ...வினு கோபியின் கழுத்தை கட்டியபடி கடலை நோக்கி கையை நீட்டினான் ... அடி வானின் சிகப்பு நெருப்பிலிருந்து நழுவி கடலின் நீல துருவத்தில் விழுந்திருந்தது சூரியன் ..அட போதும் நீ சூரியனுக்கு கை காட்டினது , பாட்டி தேடும் வீட்டுக்கு போகலாம் வா வா ...தம்பியின் கையை பிடித்து போக எத்தனித்தான் கோபி ...

கோபிணா... .

என்னடா குட்டி .. 

அந்த லைட் ஹவுஸ் கு போகலாம் வாண்ணா..அங்க இருந்த  ஹீமன் கத்தி காணாம போய்டுச்சு  .. அதுனால தான் அது இப்போ எரிய மாட்டிகுது தெரியுமா ... சமதலத்தின் கிழக்கே மற்ற கலங்கரை விளக்கங்களை போல இல்லாமல் முற்றிலும் கரிய நிறத்தில்  இருந்த அதை கோபி பார்த்தான் ..
    
                   "  ஓ.. அப்டியா ..சரி யாரு இத உன் கிட்ட சொன்னது ?.."

"கார்த்தி மாமா தான் சொன்னாரு ... அன்னைக்கு மாமா கூட ஊர்ல இல்லையாம் ..அந்த டைம் பாத்து அந்த பேய் seletor ஹீமனோட கத்திய தூக்கிட்டு போயிடுச்சாம் .. மாமா இருந்திருந்தா எப்டியாவது காப்பாத்தி இருப்பார் ல .. "
"அந்த பேய் பேரு  seletor இல்ல skeletor .. சரி மாமா பேய் குட சண்ட போட்டு நி எப்ப பாத்த.." கோபி கிண்டலாய் சிரித்தபடி வினவினான் ..
சரி உன் கிட்ட மட்டும் அந்த ரகசியத்த சொல்றேன் .. 
"எங்க சொல்லு பாப்போம் .. "
அந்த லைட் ஹவுஸ் ஹீமன் கத்தி நால தான் இத்தனை நாளா எறிஞ்சிட்டு இருந்துச்சாம் .. போன வருஷம் ஹீமன் ஊருக்கு போனதுல இருந்து அத கார்த்தி மாமாவும் அவரோட பிரண்டு  வீரா மாமாவுந்தான் பாத்துட்டு இருந்தாங்க .. 
"சரி சரி .. உனோட சட்ட எங்க ?..."
நான் தான் இன்னைக்கு விளையாடறதுக்கு சட்டயே போட்டு வரலையே .. சரிடா குட்டி வேகமா வா .. எனக்கு பசிக்குது .. கரையை நோக்கி இறங்கிய பாதையில் இருவரும் இறங்கி ஓடினார்கள் ...

அன்றிரவு ..ஆழ்கடலின் குளிரைப்பெற்ற  மேகங்கள் அந்த பிரதேசத்தை சூழ தொடங்கி இருந்தது ...என்ன மாமா ..ஹீமன் கத்திய நீங்க தான் வச்சுகிட்டு இருந்தீங்க போல ..வீட்டின் வெளிய கயத்து கட்டிலில் படுத்திருந்த கார்த்தி மாமாவைப்பார்த்து கோபி கேட்டான் ..

ஆ அதுவா .. சிறுசு கடலுக்கு போகணும்னு அடம் பன்னுனாப்பா.. அதான் அவன் பாக்கற கார்டூன வச்சு சும்மா மெரட்டி வச்சு இருக்கேன் ..கோபிக்கும் ,வினுவுக்கும் கார்த்தி மாமா தான் ஹீரோ ..கார்த்தியும் அவனின் ஆஜானுபாக நண்பன் வீராவும் அந்த ஊரின் பள்ளியில்  வாத்தியார்கள்,அந்த சிறிய ஊரின் செல்வாக்கான இளவட்டங்கள் . இதுவரை கோபி ,வினுவின்  எல்லா  கோடை விடுமுறைகளும்   கேரளா எல்லையை ஒட்டிய இந்த கிராமத்து பாட்டி வீட்டில் கார்த்தி மாமாவோடு அழகாய் கழிந்தன    ...இந்தமுறை உட்பட .. 

அதுவரை வானத்தில் முழுதாய் படர்ந்த கருமேகங்கள் நிலவை விழுங்க தொடங்கியது  .. வான அரங்கு மழை வைபவத்திற்கு ஆயத்தமாகி கொண்டிருந்தது .. கொஞ்ச நேரத்துல உள்ள போய்டலாம் என்ன .. கார்த்தி சொல்லிக்கொண்டிருக்கும் போதே வினு பொத்தென அவர்களின் நடுவே விழுந்தான்.. 
"ரெண்டு பெரும் என்ன பேசிட்டு இருக்கீங்க .. நா இன்னைக்கு இங்க தான் தூங்க போறேன் ..!!"
அதுவாடா செல்லம் .. இன்னைக்கு ராத்திரி அந்த skeletor பேய் வானத்துல இருந்து  வர போகுது ..அதோட கத்தி கூட தெரியுது அங்க பாரேன் ..கார்த்தி காட்டிய கீழ்வானில்  மின்னல் முளைத்து சரேலென நடுவானில் பாய்ந்தது .வினு அலறி போர்வையை போர்த்திக்கொண்டு கார்த்தி மாமாவை கட்டிக்கொண்டான் .. அதற்குள் மழை தொடங்கி இருக்க கார்த்தி வினுவை போர்வையோடு பொத்தி வீட்டுக்குள் படுக்க வைத்தான் ..வினு பயத்தில் உடனே தூங்கிபோனான் ..
வினுவின் கோடைகாலம் ஆனந்தமாய் கழிந்துக்கொண்டிருன்தது ..பகல் முழுக்க புதுப்புது விளையாட்டுக்கள் .. மாலையில் மலைக்குன்றின் சமதளத்தில் அண்ணனோடு கால்பந்து.. பாட்டியின் சமையல் ,கோடையின் நன்கொடையான மாம்பலம் ,பழா,இளநீர் ,நுங்கு ..பாட்டிக்கு தெரியாமல் கார்த்தி வாங்கி தரும் ரோஸ் மில்க்  ,.. கார்த்தியின் புல்லட்டில் முன்னாடி அமர்ந்து செல்லும்போது அதை தானே ஓட்டுவதை போல் வினு உணர்ந்தான் ...

கோபி போன ஆண்டு இங்கு வந்தபோதே நீச்சல் பழகி இருந்தான் ..அதனால் இந்த முறை மதிய உணவு உண்ணும் நேரம் வரை கார்தியோடும்,வீராவோடும் ஊர் எல்லையில் இருந்த கிணற்றில் கழித்தான் ..கிணற்று குளியல் அவர்களின் பசியை தூண்டி பாட்டி செய்யும் நாட்டுக்கோழி குழம்பையும் , நண்டையும் ஒரு பிடி பிடிக்க உதவியது ..அன்று அவர்களோடு வினுவும் சேர்ந்துக்கொண்டான் ..கிணற்ற்றுக்குள் skeletor பதுங்கி இருப்பதாக கார்த்தி சொல்லியும் அவன் கேட்கவில்லை ..

"எனக்கு அந்த பேய் பாத்து எல்லாம் பயம் இல்லையே .. என்ன ஹீமன் காப்பாத்துவான் .. இல்லனா நீயும் வீரா மாமாவும் காப்பாத்துங்க" என சொல்லியபடி யாரும் எதிர்பாக்காத வேலையில் வினு தண்ணீரில் குதித்தான் ..கார்த்தி பதறியடித்து கிணற்றில் குதித்தான் ..சற்று நேரத்தில் வினுவின் தலைமுடியை பிடித்து அள்ளி அவனை மார்போடு அணைத்து பக்கத்தில் இருந்த மருத்துவர் வீட்டுக்கு ஓட தொடங்கினான் .. வினுவிட்கு உடல் நடுங்கியது ..எதன் மேலோ பயங்கர வேகத்தில் பயணிப்பதாய் உணர்ந்தான் ..சட்டென நினைவு வந்த  தான் கார்த்தி மாமாவின் தோள்மேலே இருப்பதை உணர்ந்த வினு .. மாமா அந்த பேய் பின்னாடி தொரத்திகிட்டு வருதா என பாவமாய் கேட்டான் .. கார்த்தி அதன் பின்னே வினுவை ஹீமன் கதையை சொல்லி ஏமாற்றக்கூடாது என நினைத்துக்கொண்டான் ..மறுநாள் முதல் கார்த்தியும்,வீராவும் வினுவை கயிற்றில் கட்டி கிணற்றில் இறக்கினர் ,அதன் அடுத்த இரண்டு வாரத்தில் அந்த வட்டத்தில் மிகச்சின்ன வயதில் நீச்சல் கற்றவனாய் வினு ஆகியிருந்தான் ..ஆனால் ......நம் வினுவை இப்போது காய்ச்சல் பற்றிக்கொண்டது ...

அந்த  சனிக்கிழமை வழக்கம் போல என்னை தேய்த்து ஊறவைத்து வினுவை குளிப்பாட்டிய பிறகு கார்த்தியும், கோபியும் அவனை பற்றிக்கொள்ள அவனுக்கு வழுக்கட்டாயமாய் குப்பைமேனி இலையின் சாறு தரப்பட்டது ..வினு அழுதபடியே வாயிலேடுத்தான். அவனுக்கு பூரணமாய் காய்ச்சல் அதில் குணமானது ..ஞாயிற்றுக்கிழமை பாட்டி கொடுத்த கசாயத்தால் வினுவிட்கு பசித்தது ..அன்று பாட்டி வைத்த ரசம் சாதமும் ,வத்தலும் ,காரதொக்கும் அமிர்தாய் இருந்தது...அமிர்தை உண்ட வினு  திண்ணையில் கார்த்தி மாமாவின் மடியில் உறங்கிபோனான் . பின்மாலை நேரத்தில் விழித்த வினுவிட்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது .. அது பக்கத்துக்கு ஊரிலிருந்து வந்திருந்த அவனின் மற்றொரு மாமன் மகள் திவ்யா....

..................... .............................. ........................................ ............................ .................................

விடுமுறை இன்னும் சில நாட்களே மீதமிருந்தது ...திவ்யாவின் வருகை வினுவினுள்ளே மாற்றங்களை உண்டுபண்ணியது , குறிப்பாக கோபியுடனும் கார்த்தியுடனும் அவனுக்கிருந்த உறவில் .. ஹீமனுக்கு பிறகு மிகவும் பலம் வாய்ந்தவனாய் தான் கருதும் கார்த்தி மாமாவோடு போட்டி போட்டு வெல்ல  அவன் மனம் நினைத்தது .. இன்னும் ஏன் ஹீமான் அங்கே இருந்திருந்தால் அவனோடு கூட நம் வினு மோதியிருக்கக்கூடும் .. காரணம் வேறு என்ன... திவ்யா தான் ..கோபியும் , கார்த்தியும் மாறி மாறி திவ்யாவை கொஞ்சுவதும் , புல்லட்டில் அவளை தூக்கி உட்காரவைத்து ஓட்டுவதும் வினுவினுள்ளே அதுவரை அவன் கண்டிராத உளைச்சலை உண்டுப்பன்னியது ....
                           "எங்க மாமா போயிட்டு இருக்க ... " அன்று காலை கையில் கயிறுடன் கிளம்பிய கார்த்தியை பார்த்து கோபி கேட்டான் ..
                           "சிறுசுங்க ரெண்டுத்துக்கும் சைக்கிள் கத்துதரலாம்னு இருக்கேன் டா... அதான் hour சைக்கிள் கடைக்கு போயிட்டு இருக்கேன் .." சற்று நேரத்தில் அந்த நீல நிற குட்டி அட்லஸ் சைக்கிள் கார்த்தியின் புல்லட்டில் கட்டி எடுத்துவரப்பட்டது .. முதல் நாள் சைக்கிள் ஓட்டும் முயற்சியில் வினு தேறவில்லை ..தனக்கு முக்கியத்துவம் தராமல் திவ்யாவிற்கு கோபியும், கார்த்தியும் அக்கறையெடுத்து சொல்லிக்கொடுப்பதாய் அவன் நினைத்ததே காரணம் ...பின் இரண்டோருனாட்கள் இப்படியே கழிந்தன .. கோபியும் கார்த்தியும் சைக்கிள் கற்றுத்தரும் ஆர்வத்தை இழந்து காத்தாடி விட்டு விளையாட தொடங்கி இருந்தனர் ..நம் வினுவையும் சைக்கிளையும் இரண்டு நாட்களாய் காணவில்லை .. திவ்யாவையும் தான் ,,,, 

                             பகல் முழுதும் கரைத்து குடித்த  வெப்பத்தை ,அலைகளால் அடித்து வரப்பட்ட மாலை தென்றல் ஆற்றிக்கொண்டிருன்தது ..அந்த சிறிய கடலை ஒட்டிய சாலையில் கார்த்தியின் புல்லட்டின் பின்னே அமர்ந்தபடி கோபி காத்தாடி விட்டுக்கொண்டிருந்தான் ..மலைக்குன்றை ஒட்டி சாலை கீழ்நோக்கி வளைந்து இறங்கியது ... அதீத இறக்கம் இது . கார்த்தி அதில் இறங்க எத்தனித்து  தன் வண்டியை neutral கு மாற்றினான் ..அந்த கணம் அவன் கண்ட காட்சி அவனை பரவசத்தில் ஆழ்த்தியது .. டேய்  மாப்ள !! அங்க பாருடா நம்ம சிறுச ......அவன் காட்டிய பக்கம் கோபி எட்டி பார்த்தான் ...மலையை ஒட்டி  வளைந்து இறங்கிய அந்த சாலையில் மின்னல் வேகத்தில் அந்த குட்டி சைக்கிள் போய்க்கொண்டிருந்தது ..சைக்கிள் ஐ மிதித்தபடி வினுவும் பின்னால் இருந்த கேரியரில் திவ்யாவும் ..சாலையின் முடிவில் சைக்கிள் ஐ அனாசியமாய் ஒரு திருப்பு திருகி வினு நிறுத்தினான் ..
   
அன்றிரவு ... எப்டிடா குட்டி இவ்ளோ அழாக சைக்கிள் ஒட்ட்டுற ..கார்த்தி வினுவை தூக்கி கொஞ்சினான் ...வினுவிட்க்குள் பெருமை பொங்கியது .. எல்லாம் ஹீமான் பவர் மாமா !! ...

"ஆமா ஹீமான் பவரு !! அது என்ன கால் முட்டில ரத்தம்?" - இது கோபி ..

"நீயா கத்து கொடுத்த .. நானா கீழ விழுந்து கத்துக்கிட்டேன் ..".வினு முதன்முறையாய் கோபியை அதட்டினான் ..அன்றிரவு வினு ஏதோ எல்லாரையும் வென்றுவிட்டதாய் பெருமையாக தூங்கினான் ...
அதே பெருமையோடு மறுநாள் காலை கண் விழித்தவனுக்கு அதிர்ச்சி .
." ஆ !! என் ஜட்டிய யாரு எடுத்தது  !!" 
போர்வையை எடுத்து கீழே மறைத்தான் .. நல்ல வேலை .. திவ்யா அங்கு இல்லை ..போவையை கட்டிக்கொண்டு வெளிதின்னைக்கு வந்தான் .
" மாமா .. உன் புல்லெட் சாவியக்குடு .. இன்னைக்கு நானும் திவ்யாவும் அதுல போக போறோம் .".திவ்யாவை பெருமையாக ஒரு பார்வை பார்த்தான் .. அவள் ஏளனமாய் தலையில் அடித்தபடி சிரித்தது வினுவிட்கு சந்தேகத்தை உண்டுபண்ணியது ..

"புல்லெட் அப்புறமா ஒட்டுவ .. உனோட ஜட்டி எங்க ராசா .."கேலி செய்தான் கோபி .. நேத்து ராத்திரி நி தூங்கினப்ப உன்ன தூக்கி நானும் மாமாவும் வீட்டுக்குள்ள படுக்க வச்சோம் .. எப்பயும் மாதிரி அப்ப நி தூக்கத்துல ஒன்னுக்கு போய்ட்ட ..அதுவும் மாமா மூஞ்சிமேல ..கோபி சொல்ல சொல்ல வினுவிட்கு இருக்ககொல்லாமல் வெட்கம் வந்தது ...இன்னும் அழுகை கூட வந்தது ... அன்றிரவு என்ன ஆனாலும் சரி .. தூங்காமல் முழித்தாலும் சரி .. படுக்கையை நனைக்க கூடாது என வினு முடிவு செய்தான் ...அன்றிரவு மணி பத்தாகியும் அவன் தூங்கவில்லை ...
 கன்ன மூடி தூங்கு டா செல்லம் . அங்க பாரு திவ்யா தூங்கிட்டா பாரு.. கார்த்தி வினுவை கொஞ்சிக்கொண்டிருந்தான் .. போ ..!! வினு சிணுங்கினான் .. இன்னைக்கு காலைல என்னைய கிண்டல்  பன்னுநீங்கள்ள .. ந தூங்காம முழிக்க போறேன் .. மறுபடியும் skeletor கதையை சொல்லி வினுவை தூங்கவைக்க மனம் வராமல் எதையோ யோசித்தபடி கார்த்தி தூங்கிபோனான் ..வினுவும் சற்று நேரத்தில் சுற்றியிருந்த தென்னமரங்களின் தாலாட்டும் காற்றில் துயிலுற்றான் ....மறுநாள் காலை வினு கோபியை பார்த்து பாசாங்கு செய்து துள்ளி குதித்தான் ..நான் தான் ஜெயிச்சேன் !! நான் தான் ஜெயிச்சேன் !! ஈரமாகாத தன் ஜட்டியை காட்டியபடி வினு ஓடினான் ...
பாரு மாமா இந்த  பயல .. சொன்ன மாதிரியே படுக்கைய நனைக்காம தூங்கிட்டானே ...பொறாமை கலந்த ஆச்சர்யத்தில் கோபி கேட்டான் ...

"அது ஒன்னும் இல்லடா மாப்ள .. பயப்புள்ள நேத்தைக்கும் சர்ருன்னு படுக்கையிலேயே பேஞ்சிட்டான்.. நான் தான் வேற ஜட்டியையும் ,படுக்கையும் மாத்திவிட்டேன் .. டவுசர் மாருனதுக்கூட தெரியாம சிறுசு ஓடுது பாரு .... "
"பெரிய ஆள் தான் மாமா நீ ..... "

..................... .................................  ............................................... .................................... ..........

விடுமுறை முடிய ஒரு நாள் தான் மீதமிருந்தது ...ஹீமனை பார்க்காமலே ஊருக்கு திரும்ப வினுவிட்கு கலக்கமாய் இருந்தது " செல்ல குட்டி இங்க வா "... லைட் ஹவுஸ் ஐ பார்த்தபடி நின்றிருந்த  வினுவை கார்த்தி அழைத்தான் ..:"என்ன அங்க போகனுமா ... ந இன்னைக்கு சாயங்காலம் கூட்டிட்டு போறேன் சரியா " .. 
"ஐ அப்போ நாம இன்னைக்கு ஹீமான் அ பாக்க போறோமா  ! " வினு முகத்தில் உற்சாக ரேகைகள் ... " இங்க பாரு குட்டி .. ஹீமான் எல்லாம் சும்மா .. அப்டி எல்லாம் யாரும் கிடையாது ... அந்த லைட் ஹவுஸ் போன மாசம் அடிச்ச இடியில வேல செய்யாம போய்டுச்சு .. அவ்ளோ தான் .. புரியுதா "

" போ மாமா நீ  சும்மா சொல்ற .. நா நம்ப மாட்டேன் போ ..  இன்னைக்கு மதியம் நீயும் எங்க கூட football ஆட வா .. சரியா ..." 

அன்று மலை  குன்றின் சமதளத்தில் உள்சாகம் கரைப்புரண்டது ..கார்த்தி ஒரு அணிக்கு தலைவனாயும் ,வீரா மற்றொன்றின் தலைவனாயும் கால்பந்து  களைக்கட்டியது ..அலைகடல் பார்வையாளனாய் ஆர்பரித்தது..ஆட்டத்தை காணும் ஆர்வத்தில் கருமேகங்கள் திரண்டு வந்து சூரியனை மறைத்தன ..மேகங்களின் ஊடே ஆர்வம் தாங்காமல் சூரியன் தன கதிர்களை சிகப்பு ,ஊதா,மஞ்சள் நிறங்களில் சிதறடித்து வானவில் கோலம் போட முயன்றது ..கால்பந்தில் கில்லாடியான கோபி கார்த்தி பக்கம் இருந்தான் .. வினு வீராவின் அணியில் .. இதுவரை வினு கோல் ஏதும் போட்டதில்லை ..ஆட்டம் தொடர்ந்தது ... இரு அணிகளிலும் தலா மூன்று கோல் அடிக்கப்பட்டன .. இன்னும் பத்து நிமிடங்கள் ஆட்டம் தொடரலாம் ....அதுவரை ஆட்டத்தில் ஆர்பரித்த கருமேகங்கள் மகிழ்ச்சி தாளாமல் சாரல் மலர்களை தூவ தொடங்கியது  ..."என்ன வீரா மழை வருது... ஆட்டத்த முடிச்சுக்கலாமா ?" கார்த்தி கேட்டான் ...  வீரா தன் அருகில் சற்றும் உற்சாகம் அடங்காமல் ஓடிக்கொண்டிருந்த வினுவை காட்டி கண் அடித்தான்...எதையோ புரிந்துக்கொண்டவனாய் கார்த்தி கோபியை பார்த்தான் .. அவன் வினுவிடம் பந்துக்கு மல்லுக்கொட்டி கொண்டிருந்தான் ... கார்த்தி வேண்டுமென்றே கோபியை லேசாக தள்ளிவிட்டான் ...பந்து வினுவின் வசம் வந்தது ...சரியாக பதினைந்து மீட்டர் தொலைவிலிருந்த கோல் கம்பத்தை நோக்கி வினு பந்தை அடித்தான் ...இந்த ஒரு உதைக்காகதான் இத்தனை நாள் காத்து இருந்ததை போல பந்து பாய்ந்தது ...

மந்திர உதை ...இடையில் நின்றவர்களின் இடைவெளிகளில் புகுந்து ..நேராய் கோல் கீப்பரின் கையை நோக்கி உருண்டி சென்றது ..கார்த்தி ஏமாற்றத்தின் விளிம்பில் பார்த்துக்கொண்டிருக்கையில் அந்த மாயஜாலம் நிகழ்ந்தது ..குன்றின் மிக அருகிலிருந்த அந்த கலங்கரை விளக்கம் பளீரென எரியதொடங்கியது ..அடுத்த நொடி இடையிலிருந்த கல்லில் பட்டு பந்து மேலெழும்பி கோல் கீப்பரின் தலைக்கு மேல் பறந்து கோலில் விழுந்தது ....வீராவும் மற்றவர்களும் வினுவை தலைக்குமேல் தூக்கியபடி உற்சாகத்தில் ஓடினர் ..கலங்கரையின் வெளிச்சம் சுழன்று அடித்தது..சாரலாய் தூவிய மேகங்கள் இப்போது சாரை சாரையாய் பொழிய ஆரம்பித்தது ...


மாமா !! அங்க பாரு !! ஹீமன் வந்தாச்சு !! ஹீமன் வந்தாச்சு !! என கத்திக்கொண்டு வினு கலங்கரையை நோக்கி ஓடினான் .. 

என்ன மாமா இது ?? ஆச்சர்யம் தாங்காமல் கோபி கேட்டான் .. இன்னைக்கு காலைல இருந்து அத  சரி  பண்ணிக்கிட்டு இருந்தாங்க கோபி ..ஆனா அதுக்குள்ள எப்டி சரி  ஆச்சுனு ஆச்சர்யமா இருக்கு ....என கார்த்தி வியந்தான் ......
ஹீமன் ஹீமன் என வினு மழையில் குதித்து ஆடிக்கொண்டிருந்தான் ... சிறுவயதில் நம் உலகம் மிகப்பெரியது .. விசித்திரமானது ... அங்கே புலிகளும் மான்களும் ஒன்றாய் பாடி ஆடும் ..அங்கே பெற்றோலின் விலை என்றுமே ஏறுவதில்லை ....விடுமுறை முடிந்த வாட்டதிலிருந்த கோபியின் தோள்களை கார்த்தி மெல்ல பற்றினான் .. கோபி அந்த மந்திர உலகை விட்டு பிரிந்து சில வருடங்கள் ஆகிவிட்டதை கார்த்தி உணர்ந்தான் ..ஒவ்வொரு ஆண்டும் வினு இங்கே வரும்போது கார்த்தியும் அந்த மந்திர உலகில் சஞ்சரித்தான் ... இனி அவன் மீண்டும் ஹீமன் ஐ பார்க்க ஒரு வருடம் காத்திருக்கவேண்டும் ....!!!!